தொடர்ச்சியாகப் பெய்துவரும் பலத்த மழை காரணமாக நீர்மட்டம் உயர்வதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், கொத்மலை காமினி திசாநாயக்க நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இதன் ஊடாக வினாடிக்கு 15,000 கனமீற்றர் நீர் மகாவலி கங்கையின் கொத்மலை ஓயாவுக்கு திறந்துவிடப்பட்டுள்ளது.
இன்று முற்பகல் 11.30 மணியளவில் இந்த நீர் வெளியேற்றம் முன்னெடுக்கப்பட்டதாகவும், நிலவும் மழை நிலைமையைக் கருத்திற்கொண்டு இவ்வாறு அவ்வப்போது நீர் வெளியேற்றப்பட வேண்டிய நிலை ஏற்படும் என்றும் நீர்த்தேக்கத்தின் பொறுப்பதிகார பொறியியலாளர் சதுர அரம்பபொல தெரிவித்துள்ளார்.
முக்கிய விடயங்கள்- மூன்று வான்கதவுகள் ஊடாக வினாடிக்கு 15,000 கனமீற்றர் நீர் கொத்மலை ஓயாவுக்கு திறந்துவிடப்படுகிறது
- இன்று முற்பகல் 11.30 மணியளவில் நீர் வெளியேற்றம் ஆரம்பமானது
- மாவத்தூர, உலப்பனை, கம்பளை, கெலிஓயா, பேராதனை உள்ளிட்ட பகுதி மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்
கீழ்நிலைப் பகுதிகளுக்கு எச்சரிக்கை
இதன் காரணமாக நீர்த்தேக்கத்தின் கீழ்நிலைப் பகுதிகளில் அமைந்துள்ள மாவத்தூர, உலப்பனை, கம்பளை, கெலிஓயா மற்றும் பேராதனை போன்ற பிரதேசங்களில் வாழும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
'டித்வா' சூறாவளி நிலவிய சந்தர்ப்பத்தில் நீரை முறையாகக் கட்டுப்படுத்த முடியாமல் திடீரென வான்கதவுகள் திறக்கப்பட்டதால் கம்பளை, கெலிஓயா மற்றும் பேராதனை ஆகிய நகரங்கள் நீரில் மூழ்கி பெரும் சேதம் ஏற்பட்டது. அவ்வாறானதொரு நிலைமை மீண்டும் ஏற்படுவதைத் தடுப்பதற்காகவே இந்த உடனடி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக பொறியியலாளர் குறிப்பிட்டுள்ளார்.
544 சதுர கிலோமீற்றர் நீரேந்து பகுதியைக் கொண்ட கொத்மலை நீர்த்தேக்கத்தின் மொத்த கொள்ளளவு 170,898 மில்லியன் கனமீற்றர்களாகும்.






