இலங்கை கடற்படையின் புதிய பிரதிப் படைகளின் பிரதானியாக ரியர் அட்மிரல் தம்மிக விஜேவர்தன இன்று (22) முதல் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கான நியமனக் கடிதத்தை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, கடற்படைத் தலைமையகத்தில் வைத்து அவரிடம் உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளார்.

கேகாலை, தொலங்கமுவ டட்லி சேனாநாயக்க மத்திய மகா வித்தியாலயத்தின் பழைய மாணவரான இவர், 1992 ஆம் ஆண்டு ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் 10 ஆவது ஆட்சேர்ப்பில் இணைந்து கடற்படை சேவையை ஆரம்பித்தார். 1994 இல் பதில் உப லெப்டினன்ட்டாக அதிகாரமளிக்கப்பட்ட அவர், 2024 ஆம் ஆண்டில் ரியர் அட்மிரல் நிலைக்குத் தரமுயர்த்தப்பட்டார்.

அறிவும் சேவை அனுபவமும்

கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில் இயந்திரவியல் பொறியியலில் இளமானிப் பட்டம் பெற்ற அவர், பின்னர் பங்களாதேஷ், அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் உயர் இராணுவப் பயிற்சிகளைப் பெற்றுள்ளார். மேலும் இந்தியாவின் கோவா பல்கலைக்கழகத்தில் நீரியல் வரைவியல் (ஹைட்ரோகிராபி) தொடர்பான முதுமானிப் பட்டத்தையும், சென்னை பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டத்திற்கு முந்தைய தத்துவமாணி (M.Phil) பட்டத்தையும் பெற்றுள்ளார்.

தனது கடற்படை சேவைக் காலத்தில் அதிவேக தாக்குதல் படகுகளின் கட்டளை அதிகாரி, கடற்படை ஒழுக்காற்று அதிகாரி, வடமேற்கு மற்றும் தென் கடற்படை கட்டளைகளின் தளபதி உள்ளிட்ட பல முக்கிய பதவிகளை அவர் வகித்துள்ளார். அத்துடன் வடக்கு கடற்படை கட்டளையின் தளபதியாகவும், கடற்படையின் தலைமை நீரியல் வரைவியல் அதிகாரியாகவும் கடமையாற்றி வருகிறார்.

வீரப் பதக்கங்களும் விளையாட்டுத் திறன்களும்

முப்பதாண்டு கால யுத்தத்தின் போது வெளிப்படுத்திய துணிச்சலுக்காக வீர விக்ரம விபூஷணய, ரண விக்ரம, ரணசூர, உத்தம சேவா மற்றும் தேச புத்ர ஆகிய பதக்கங்கள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன. கடற்படைத் தளபதிகளின் பாராட்டு மடல்களை இருமுறை பெற்றுள்ள இவர், கடற்படை மெய்வல்லுநர் சங்கத்தின் தலைவராகவும், ஜூடோ மற்றும் மல்யுத்த சங்கங்களின் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.