மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் நாராஹேன்பிட்ட பிரதான அலுவலகத்தினால் வழங்கப்படும் அனைத்து பொதுச் சேவைகளும் எதிர்வரும் திங்கட்கிழமை (23) முதல் முன்கூட்டியே நேரம் ஒதுக்கும் முறையின் (Appointment System) ஊடாக மட்டுமே வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களைக் குறைத்து, இலகுவாக சேவைகளை வழங்குவதற்காக 2026.11.23 திகதிக்கு முன்னர் வழங்கப்பட்டிருந்த நாளாந்த நேர ஒதுக்கீட்டு வாய்ப்புகளின் எண்ணிக்கை இரண்டு மடங்கிற்கும் அதிகமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக முன்னரை விடவும் அதிக எண்ணிக்கையிலானோருக்கு நாளாந்தம் விரைவாக சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
நேரத்தை எவ்வாறு ஒதுக்குவது?
சேவைகளைப் பெறுவோர் இரு வழிகளில் தமக்கு வசதியான ஒரு தினத்தையும் நேரத்தையும் முன்கூட்டியே ஒதுக்கிக்கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக 011 2 117 116 என்ற தொலைபேசி இலக்கத்தை அழைப்பதன் மூலமாகவோ அல்லது https://dmtappointments.dmt.gov.lk என்ற இணையத்தளத்திற்குப் பிரவேசிப்பதன் மூலமாகவோ குறித்த வசதியைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இதனால், 2026 நவம்பர் 23 ஆம் திகதி முதல் நாராஹேன்பிட்ட அலுவலகத்திற்கு முன்பாக அதிகாலை முதல் வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் எனவும், நேரத்தை மிச்சப்படுத்துவதற்காக இந்த முன்கூட்டியே நேரம் ஒதுக்கும் முறையை மாத்திரம் பயன்படுத்துமாறும் திணைக்களம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.






