கொழும்பு, காலி மற்றும் இரத்தினபுரி போன்ற பகுதிகளில் பெருமளவிலான பட்டாம்பூச்சிகள் கூட்டமாக நகர்ந்து செல்லும் புகைப்படங்களும் காணொளிகளும் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன. இந்த திடீர் வரத்துக்கான காரணம் என்னவென்று பலரும் வியப்படைந்துள்ளனர்.
Fact Crescendo Sri Lanka தகவலின்படி, இது வழக்கமான ஒரு பருவகாலப் பட்டாம்பூச்சி இடம்பெயர்வாகும். இது ஆண்டுதோறும் இரண்டு காலப்பகுதிகளில் நிகழ்கிறது. இதில் பிரதான இடம்பெயர்வு அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையிலும், மற்றொரு சிறிய இடம்பெயர்வு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடையிலும் இடம்பெறுகின்றது.
முக்கிய விடயங்கள்
- பருவமழை மற்றும் இனப்பெருக்க சுழற்சிகளுடன் தொடர்புடைய ஒரு இயற்கையான பருவகால இடம்பெயர்வே இந்த நிகழ்வு என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
- Lemon Emigrant, Mottled Emigrant, Lesser Albatross மற்றும் Common Albatross ஆகியவை இதில் இடம்பெயரும் பிரதான இனங்களாகும்.
- இந்த இடம்பெயர்வு இயற்கை அனர்த்தம் எதற்கும் முன்கூட்டிய எச்சரிக்கை அல்ல என்பதை விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அவை ஏன் இடம்பெயர்கின்றன?
பருவமழை மாறுதல் காலத்தில் பெய்யும் மழை காரணமாக தாவரங்கள் செழித்து வளர்ந்து, குறிப்பாக உலர் வலயப் பகுதிகளில் அதிக உணவு மற்றும் இனப்பெருக்க சூழலை வழங்குகின்றன. இவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, புதிய முட்டையிடும் இடங்களைத் தேடுவதற்கும் உணவுக்கான போட்டியைத் தவிர்ப்பதற்கும் பட்டாம்பூச்சிகள் பல்வேறு பிரதேசங்களை நோக்கிப் பயணிக்கின்றன.
காற்றின் திசை மற்றும் தாவரங்களின் இருப்பைப் பொறுத்து பெருகும் பட்டாம்பூச்சிகள் நாடு முழுவதும் பரவுவதாக இலங்கை பட்டாம்பூச்சி பாதுகாப்பு சங்கத்தின் முன்னாள் தலைவர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு பொரளைப் பகுதியில் Lemon Emigrant மற்றும் Mottled Emigrant வகை பட்டாம்பூச்சிகள் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிப் பறப்பதை அவர் அவதானித்துள்ளார்.
சபரகமுவ பல்கலைக்கழக பேராசிரியர் கபில திசாநாயக்க உள்ளிட்ட ஆராய்ச்சியாளர்களின் பங்கேற்புடன் 'Taprobanica' இதழில் வெளியான 2024 ஆம் ஆண்டின் ஆய்வொன்று, குமண தேசிய பூங்காவிலிருந்து வில்பத்து வரை நீளும் ஒரு பிரதான பறப்புப் பாதையை வெளிப்படுத்தியுள்ளது. பட்டாம்பூச்சிகள் மூன்று முதல் நான்கு நாட்களில் சுமார் 280 கிலோமீற்றர் தூரத்தைக் கடக்கின்றன. இதில் இடம்பெயரும் Albatross இனங்கள் மணிக்கு சுமார் 11 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்கின்றன.
அவை ஸ்ரீ பாதத்திற்குச் செல்கின்றனவா அல்லது அனர்த்த எச்சரிக்கையா?
இவ்வாறான இடம்பெயர்வுகள், சமனல கந்த (பட்டாம்பூச்சி மலை) என்று அழைக்கப்படும் ஸ்ரீ பாதத்தை நோக்கியே இப்பூச்சிகள் நேராகச் செல்கின்றன என்ற பாரம்பரிய நம்பிக்கைகளை வழமையாக நினைவுபடுத்துகின்றன. பட்டாம்பூச்சிகள் சில வேளைகளில் இனச்சேர்க்கைக்காக உயரமான இடங்களில் ஒன்றுகூடுவதுண்டு (hill-topping). இருப்பினும் இடம்பெயர்வு தரவுகளின்படி, அவற்றில் பெரும்பாலானவை வடமேற்கு திசையிலேயே நகர்கின்றன என நிபுணர்கள் கூறுகின்றனர்.
அதேவேளை, இந்தப் பட்டாம்பூச்சிகளின் பயணம் ஒரு சூறாவளி அல்லது இயற்கை அனர்த்தம் வரவிருப்பதைக் குறிக்கலாம் என இணையத்தில் ஊகங்கள் பரவின. பெருமளவிலான பட்டாம்பூச்சிகளின் பறப்புக்கும் அனர்த்த எச்சரிக்கைகளுக்கும் தொடர்பிருப்பதாக எவ்வித விஞ்ஞான ஆதாரங்களும் இல்லை என்று கூறி நிபுணர்கள் இதனை நிராகரித்தனர். இந்த நிகழ்வு ஒரு இயற்கையான சுற்றுச்சூழல் சுழற்சி மட்டுமே என்பதை அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.






