குருணாகலிலிருந்து மாத்தளை நோக்கி இரண்டு உந்துருளிகளில் பயணித்துக் கொண்டிருந்த இரண்டு நண்பர்கள் எதிர்கொண்ட துரதிர்ஷ்டவசமான தொடர் விபத்துக்கள் குறித்து மாத்தளை, யட்டவத்த பிரதேசத்தில் இருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.

பயணித்துக் கொண்டிருந்தபோது ஒரு உந்துருளி வீதியோரத்திலிருந்த புத்தர் சிலை வழிபாட்டு கூண்டொன்றில் மோதியதில் முதலாவது விபத்து நேர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நண்பனை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும்போது நிகழ்ந்த விபரீதம்

பின்னாலிருந்து வந்த மற்றைய நண்பர், விபத்தில் காயமடைந்த தனது நண்பரை உடனடியாக முச்சக்கரவண்டியொன்றில் ஏற்றி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

அதன்பின்னர் அவரும் அந்த முச்சக்கரவண்டியைப் பின்தொடர்ந்து தனது உந்துருளியைச் செலுத்திக்கொண்டு வைத்தியசாலை நோக்கிப் பயணித்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அவ்வாறு பயணித்துக் கொண்டிருந்தபோது யட்டவத்த, எஹட்டுவெவ பிரதேசத்தில் வைத்து அவரது உந்துருளியும் கார் ஒன்றிலும் மின்கம்பமொன்றிலும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இருவருமே உயிரிழப்பு

இரண்டாவது விபத்துக்குள்ளான இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், முதலில் விபத்துக்குள்ளாகி முச்சக்கரவண்டியில் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட மற்றைய நண்பரும் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். இவ்வாறு துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தவர்கள் 28 மற்றும் 24 வயதுடைய இரண்டு இளைஞர்களாவர்.

குறிச்சொற்கள்AccidentmatalenewsSri Lankasri lanka newsSrilanka