எதிர்வரும் டிசம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ள ஸ்ரீபாத யாத்திரைக் காலத்திற்கு முன்னதாக, அங்குள்ள புனரமைப்புப் பணிகள் தொடர்பில் சமூக ஊடகங்களில் கடுமையான வாதப்பிரதிவாதங்கள் எழுந்துள்ளன. யூடியூபரான அஷேன் சேனாரத்ன ஸ்ரீபாதஸ்தானத்தின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பை விமர்சித்து காணொளி ஒன்றை வெளியிட்டமையும், அதற்கு ஸ்ரீபாதஸ்தானாதிபதி வணக்கத்துக்குரிய பெங்கமுவே ஸ்ரீ தம்மதின்ன நாயக்க தேரர் கடுமையான பதில் கருத்தை வெளியிட்டமையுமே இதற்குக் காரணமாகும்.
ஸ்ரீபாதஸ்தானத்திற்குள் பிரவேசிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ள காலமல்லாத ஒரு காலகட்டத்தில், பூட்டப்பட்டிருந்த வாயிலைத் தாண்டி அத்துமீறி நுழைந்து இந்தக் காணொளி எடுக்கப்பட்டுள்ளதாக நாயக்க தேரர் தெரிவிக்கின்றார். உள்ளே நுழைவதைத் தடுத்த பாதுகாப்பு உத்தியோகத்தரை அவர் திட்டியுள்ளதாகவும், தனிப்பட்ட விளம்பர நோக்கங்களுக்காக அரசாங்கத்தின் மீதும் பாதுகாப்புப் படையினர் மீதும் பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி அவர் தகாத முறையில் நடந்துகொண்டார் என்றும் தேரர் குறிப்பிட்டார்.
முக்கிய விடயங்கள்
- காலமல்லாத பருவத்தில் பூட்டப்பட்டிருந்த வாயிலைத் தாண்டி அஷேன் அத்துமீறி நுழைந்து காணொளி பதிவு செய்ததாகக் குற்றச்சாட்டு
- பாதுகாப்பு வேலிகள் உடைந்திருப்பதாகவும் தமக்கு மின்சாரம் தாக்கியதாகவும் அஷேன் தெரிவிப்பு
- சூறாவளி சேதங்கள் புனரமைக்கப்பட்டு முடிந்துவிட்டதாகக் கூறும் நாயக்க தேரர், அஷேனின் நடத்தையைக் கண்டிக்கிறார்
அஷேன் கூறும் விடயம்
எவ்வாறாயினும், சில பாதுகாப்பு வேலிகள் மற்றும் மின்விளக்குகளுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக அஷேன் சேனாரத்ன தனது காணொளியில் சுட்டிக்காட்டினார். பாதுகாப்பு வேலியைத் தொட்டபோது தமக்கு மின்சாரம் தாக்கியதாகவும், வெளிநாட்டவர் ஒருவருக்கு இத்தகைய விபத்து ஏற்பட்டால் அது நாட்டுக்கே பெரும் இழுக்கு என்றும் அவர் கூறினார்.
மேலும் 'டித்வா' சூறாவளிக்குப் பின்னர் ஏற்பட்ட மண்சரிவுகளால் குவிந்துள்ள இடிபாடுகள் இன்னமும் அகற்றப்படவில்லை என்று குற்றஞ்சாட்டிய அவர், டிசம்பருக்கு முன்னர் இவற்றைச் சீரமைக்குமாறு ஜனாதிபதி உள்ளிட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தார். முடியாதென்றால் அந்தப் பணியைத் தன்னிடம் ஒப்படைக்குமாறும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
“இந்தத் திட்டத்தை டிசம்பரில் முடிக்க வேண்டுமானால் இப்போதே தொடங்க வேண்டும். உடனடியாக இவற்றைச் சீரமைத்து ஸ்ரீபாதவைப் பாதுகாக்கும் பணியைச் செய்யுங்கள். அது எமது கடமை போன்றே உங்களதும் கடமையாகும். பொதுமக்களின் கடமையாகும். அதேபோன்று ஜனாதிபதி அவர்களே, உங்களதும் கடமையாகும்.”
நாயக்க தேரரின் விளக்கம்
இக்குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த பெங்கமுவே தம்மதின்ன நாயக்க தேரர், டித்வா சூறாவளியால் ஹட்டன் வீதிக்கு ஏற்பட்ட சேதங்கள் தற்போது முழுமையாகச் சீரமைக்கப்பட்டுவிட்டதாகத் தெரிவித்தார். ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் இரத்தினபுரி மற்றும் நுவரெலியா மாவட்டச் செயலாளர்கள், பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர் இணைந்து அப்பணிகளை மேற்கொண்டதாக அவர் கூறினார்.
அத்துடன், வீதியின் ஓரிடத்தில் காணப்பட்ட குப்பைகள் மற்றும் இடிபாட்டுக் குவியலை அகற்றுவதற்கு 150க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு, சுமார் ஒரு மாத காலம் கடினமாக உழைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார். காலமல்லாத பருவத்தில் வரும் சிலரின் அநாகரிகமான நடத்தைகளால் பலாபத்தல வீதியிலுள்ள இந்திகட்டுபான வரையான நான்கு அம்பலம்களும் மலசலகூடத் தொகுதிகளும் தொடர்ச்சியாக சேதமடைவதாகவும் நாயக்க தேரர் சுட்டிக்காட்டினார்.






