2026 ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் நாட்டின் முக்கிய அரச நிறுவனங்களின் நிதி நிலைமை இரு வேறுபட்ட முனைகளில் காணப்படுவதாக நிதி அமைச்சின் அரையாண்டு நிதி நிலைமை தொடர்பான தற்காலிக தரவு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. அரச வங்கிகள் உள்ளிட்ட 40 நிறுவனங்கள் பாரிய இலாபத்தைப் பதிவு செய்துள்ள அதேவேளை, மேலும் 12 நிறுவனங்கள் பாரிய நிதி நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முக்கிய மூன்று அரச வங்கிகளும் அதிக இலாபத்தை ஈட்டி முன்னணியில் உள்ளன. இலங்கை வங்கி 62.6 பில்லியன் ரூபாவை வரிக்கு முந்தைய இலாபமாகப் பதிவு செய்துள்ளதுடன், மக்கள் வங்கி 32.6 பில்லியன் ரூபாவையும், தேசிய சேமிப்பு வங்கி 22.5 பில்லியன் ரூபாவையும் இலாபமாகப் பெற்றுள்ளன. ஊழியர் நம்பிக்கை நிதிச் சபை 36.5 பில்லியன் ரூபாவையும், இலங்கை துறைமுக அதிகார சபை 34.5 பில்லியன் ரூபாவையும் இலாபமாக ஈட்ட முடிந்துள்ளது.
முக்கிய விடயங்கள்- இலங்கை வங்கி 62.6 பில்லியன் ரூபா இலாபத்துடன் முன்னிலை
- ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஆறு மாதங்களில் 35.5 பில்லியன் ரூபா நட்டம்
- அரச நிறுவனங்களுக்காக புதிய சட்டமூலத்தைக் கொண்டுவர அரசாங்கம் தயார்
மானியங்களின் அடிப்படையில் இலாபமீட்டிய மற்றும் நட்டமடைந்த நிறுவனங்கள்
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 29.1 பில்லியன் ரூபாவை வரிக்கு முந்தைய இலாபமாகக் காட்டியுள்ள போதிலும், அதற்குப் பின்னால் அரசாங்கம் வழங்கிய 41 பில்லியன் ரூபா மானியம் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) நிறுவனம் 24.8 பில்லியன் ரூபா இலாபத்தைப் பதிவு செய்துள்ளதுடன், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை 16.1 பில்லியன் ரூபாவையும், தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதி 12.8 பில்லியன் ரூபாவையும் இலாபமாகப் பெற்றுள்ளன. அபிவிருத்தி லொத்தர் சபை மற்றும் தேசிய லொத்தர் சபை ஆகியன தலா 5.34 பில்லியன் ரூபாவை இலாபமாக ஈட்டியுள்ளன. இது தவிர, பிரதேச அபிவிருத்தி வங்கி 3.5 பில்லியன் ரூபாவையும், இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் 2.6 பில்லியன் ரூபாவையும், இலங்கை மின்சார சபை மற்றும் அரச மருந்தாக்கக் கூட்டுத்தாபனம் ஆகியன தலா 1.4 பில்லியன் ரூபாவையும், மில்கோ நிறுவனம் 999 மில்லியன் ரூபாவையும் இலாபமாகப் பதிவு செய்துள்ளன.
மறுபுறம், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் 35.5 பில்லியன் ரூபா என்ற பாரிய நட்டத்தை அடைந்து கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. 2025 ஆம் ஆண்டில் இலாபமடைந்த இலங்கை போக்குவரத்துச் சபை 471 மில்லியன் ரூபா நட்டத்தையும், அரச அச்சகக் கூட்டுத்தாபனம் 185 மில்லியன் ரூபா நட்டத்தையும், சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பு 37 மில்லியன் ரூபா நட்டத்தையும் பதிவு செய்துள்ளன. லங்கா சுகர் நிறுவனம் 1.5 பில்லியன் ரூபாவையும், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் 166 மில்லியன் ரூபாவையும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் 68 மில்லியன் ரூபாவையும், அரச அபிவிருத்தி மற்றும் நிர்மாணக் கூட்டுத்தாபனம் 193 மில்லியன் ரூபாவையும், அரச பொறியியல் கூட்டுத்தாபனம் 182 மில்லியன் ரூபாவையும், லங்கா சதொச நிறுவனம் 89 மில்லியன் ரூபாவையும் நட்டமாகப் பதிவு செய்துள்ளன.
“இன்று அரச நிறுவனங்களாக அடையாளம் காணப்பட்ட 52725 நிறுவனங்கள் உள்ளன. எனினும் அவற்றில் சில மட்டுமே உண்மையான நிறுவனங்களாகச் செயற்படுகின்றன. ஏனைய நிறுவனங்களுக்கு வேறு கடமைகள் உள்ளன. அங்கு தெளிவாகக் கூற வேண்டும், அரசாங்கத்திற்கு வர்த்தகங்களை நடத்தும் நோக்கம் இல்லை. அரசாங்கத்திற்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பவராகச் செயற்பட மட்டுமே தேவை உள்ளது.” - கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ
அரச நிறுவன முறைமைக்கு புதிய சட்டம்
இதேவேளை, அரச நிறுவனங்களின் முறைமையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் புதிய சட்டமூலத்தின் ஊடாக குறிப்பிட்ட நிறுவனங்களை மறுசீரமைத்தல், பல்வகைப்படுத்துதல் அல்லது ஒன்றிணைத்தல் இடம்பெறும் எனவும், சில நிறுவனங்களைத் தனியார் துறையினருடன் கூட்டாண்மையாக முன்னெடுத்துச் செல்ல எதிர்பார்ப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த அனைத்து நிறுவனங்களையும் ஒரு பொதுவான சட்டக் கட்டமைப்புக்குள் கொண்டுவர எதிர்பார்ப்பதுடன், சந்தை நிலைமைகளின் அடிப்படையில் சுயாதீனமாகத் தீர்மானங்களை எடுக்கக்கூடிய கூட்டாக்கப்பட்ட நிறுவனங்களாக இவற்றை மாற்றுவதற்கான செயல்முறைக்குக் குறிப்பிட்ட கால அவகாசம் தேவைப்படும் என நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அடுத்து என்ன?
அரச நிறுவனங்கள் தொடர்பான புதிய சட்டமூலம் விரைவில் முன்வைக்கப்படவுள்ளதுடன், அதற்கான சட்டத் திருத்தங்களும் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதையும் படியுங்கள்- திட்டமிட்ட குற்றங்கள் சட்டமூலத்தில் தடுத்து வைக்கும் காலம் 48 மணித்தியாலங்களாகக் குறைப்பு
- பாராளுமன்ற ஊழியர்களிடமிருந்து அரசாங்கத்திடம் போக்குவரத்து கொடுப்பனவு கோரிக்கை
- முன்னாள் பிரத்தியேக செயலாளரின் விசாரணை தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷவிடம் இரண்டரை மணிநேர வாக்குமூலம்






