இலங்கையின் தேசிய பூங்காக்களுக்குள் வணிக நோக்கங்களுக்காக பிகினி ஆடை அணிந்து புகைப்படப் பிடிப்புகள் முன்னெடுக்கப்படுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து சுற்றாடல் அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
வெளிநாட்டு பெண்கள் பிகினி ஆடை அணிந்திருக்கும் சில புகைப்படங்கள் ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வரும் நிலையில், நாட்டின் இயற்கை சூழலை வணிக நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்துவது மற்றும் பாதுகாக்கப்பட்ட வனவிலங்கு வலயங்களுக்குள்ளும் அவற்றைச் சுற்றியும் இடம்பெறும் செயற்பாடுகள் குறித்து தீவிர வாதப்பிரதிவாதங்கள் எழுந்துள்ளன.
இதற்கிடையில், தனமல்வில பகுதியில் தங்குமிட வசதிகளை வழங்கும் நிறுவனமான Anilka Rooms & Eco Estate என்ற நிறுவனம், யால தேசிய பூங்காவை அண்டிய சூழலில் பிகினி மற்றும் பேஷன் புகைப்படப் பிடிப்புகளை ஊக்குவித்து சமூக ஊடகப் பதிவொன்றை வெளியிட்டிருந்தமையும் கவனத்தை ஈர்த்துள்ளது. இருப்பினும், அந்த நிறுவனத்தின் ஊக்குவிப்பு நடவடிக்கைகளுக்கும் தேசிய பூங்காக்களுக்குள் இடம்பெறுவதாகக் கூறப்படும் அங்கீகாரமற்ற வணிக புகைப்படப் பிடிப்புகள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கும் இடையில் நேரடித் தொடர்பு உள்ளதா என்பது குறித்து இதுவரை எந்த ஆதாரமும் உறுதிப்படுத்தப்படவில்லை. அவை இரண்டும் தனித்தனியான விடயங்களாகவே உள்ளன.
இந்தச் சம்பவம் குறித்து சுற்றாடல் பிரதி அமைச்சர் அன்டன் ஜயகொடி குறிப்பிடுகையில், யால தேசிய பூங்காவின் பாதுகாப்பு நுழைவாயிலில் இருந்து இது தொடர்பில் தமக்கு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்றார். பிகினி அல்லது அது போன்ற ஆடைகளை அணிந்து சுற்றுலாப் பயணிகள் தேசிய பூங்காவுக்குள் நுழைவதைத் தடைசெய்யும் சட்ட ஏற்பாடுகள் எதுவும் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும், குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் உறுதிப்படுத்தினார்.
இதேவேளை, லுணுகம்வெஹெர, யால மற்றும் குமன ஆகிய தேசிய பூங்காக்களுக்குள் வணிக ரீதியிலான பிகினி புகைப்படப் பிடிப்புகள் இடம்பெறுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு தேசிய விலங்கியல் பூங்காக்கள் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஷர்மிலா ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.
"எமது தேசிய பூங்காக்கள் வனவிலங்குகளுக்கும் வருகை தரும் குடும்பங்களுக்கும் புனிதமான பாதுகாக்கப்பட்ட இடங்களாகும்: இந்த சட்டவிரோத பிகினி படப்பிடிப்பு நடவடிக்கையை உடனே நிறுத்துங்கள்!" என்ற தலைப்பில் முகநூலில் பதிவொன்றை இட்டு அவர் இது தொடர்பில் கேள்வியெழுப்பியுள்ளார். அரைகுறை நீச்சல் உடைகளை அணிந்த வெளிநாட்டு மாதிரிகளை (Models) பயன்படுத்தி புகைப்படத் தொகுப்புகளை விளம்பரப்படுத்துவதாகக் கூறப்படும் தனியார் வணிக நிறுவனமொன்றின் செயற்பாடுகளை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவரது குற்றச்சாட்டுகளின்படி, இந்த படப்பிடிப்புகளுக்காக மாதிரிகள் தேசிய பூங்காக்களுக்குள் காட்சியளிப்பதுடன், அதற்காக திறந்த சவாரி ஜீப் வண்டிகளும் பயன்படுத்தப்படுவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளுடன் செல்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் சவாரி வழிகாட்டிகளின் கண்காணிப்பு அல்லது அறிவின்றி இவ்வாறான நடவடிக்கைகள் எவ்வாறு இடம்பெற முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
குறித்த நபர்கள் உரிய அனுமதிப்பத்திரங்களையும் அனுமதிகளையும் பெற்றுள்ளனரா என்பது குறித்து விசாரிக்குமாறு ஷர்மிலா ராஜபக்ஷ வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை, சுற்றுலா பொலிஸார் மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், நாட்டிற்கு விஜயம் செய்யும் போது வணிக ரீதியிலான மாடலிங் மற்றும் புகைப்படக் கலை நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு சம்பந்தப்பட்ட வெளிநாட்டவர்களுக்கு சட்டப்பூர்வ அனுமதி உள்ளதா என்பது குறித்தும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
வெளிவிவகார அமைச்சின் தகவலின்படி, வனவிலங்கு பாதுகாக்கப்பட்ட வலயங்களுக்குள் படப்பிடிப்புகளை மேற்கொள்வதற்கு வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்திடம் இருந்து முன் அனுமதி பெறுவது கட்டாயமாகும். அதற்கான விண்ணப்பங்கள் உத்தேச படப்பிடிப்புக்கு குறைந்தபட்சம் இரண்டு வாரங்களுக்கு முன்னதாக சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
இந்தக் குற்றச்சாட்டுகள் காரணமாக, பாதுகாக்கப்பட்ட வலயங்களுக்குள் இடம்பெறும் வணிக நடவடிக்கைகளைக் கண்காணித்தல், அனுமதிப்பத்திர தேவைகளை நடைமுறைப்படுத்துதல் மற்றும் வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் சவாரி வழிகாட்டிகளின் பொறுப்புக்கூறல் குறித்து பரவலான கேள்விகள் எழுந்துள்ளன.
எவ்வாறாயினும், தேசிய பூங்காக்களுக்குள் வணிக ரீதியிலான புகைப்படப் பிடிப்புகள் இடம்பெறுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் இதுவரை சுயாதீனமாக உறுதிப்படுத்தப்படவில்லை. அதேநேரம், இது தொடர்பில் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களமோ அல்லது இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையோ இதுவரை உத்தியோகபூர்வமாக எவ்வித பதிலையும் அளிக்கவில்லை.






